பலதார மணம் - 5

பலதார மணத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது ?

உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் 'ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்துவது திருக்குர்ஆன் மட்டும்தான்.

திருக்குர்ஆனின் மனைவியர் (அந்நிஸா ) என்னும் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனம் "... உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ , மூன்றோ, நான்கோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)." என்று சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் அதே அத்தியாயத்தின் 129 ஆம் வசனத்தில், "(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது..." என்று மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு அனுமதியேயன்றி கட்டாயமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் 4:3 ல் "சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள் )" என்று கூறுவதன் மூலம் ஒரேயொரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. மேலும் 4:129 ஆவது வசனத்தில் "சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது" என்று கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முந்தைய கால கட்டங்களில் பலதார மணத்திற்குத் தடையில்லாமல் இருந்தது . ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; இத்தனைதான் என்ற வரையறை என்பது இல்லாமலிருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு இஸ்லாத்தில் ஓர் ஆண் அதிக பட்சமாக நான்கு பெண்களை மட்டுமே திருமணம் செய் து கொள்ள முடியும் என்று வரம்பு கட்டியது. அதுவும் மனைவியரிடையே சமமான நீதி செலுத்த வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையோடுதான் பலதார மணத்திற்கு வரையறையுடன் கூடிய அனுமதி அளித்தது - அனுமதிதான்; கட்டாயமன்று.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரைக் கணவராக ஏற்றுக் கொள்வது அல்லது 'பொதுச் சொத்தாக மாறுவது' என்ற இரண்டைத் தவிர மூன்றாவது வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் (இரண்டாம் தாரமான) முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - (பொதுச் சொத்தாக மாறுவதான) இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

இஸ்லாம் கூறும் ஒழுக்கமான உறவு நெறிகளைப் பின்பற்றினால் வெளிப் பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்த நிலை.

ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே சட்டப்படிச் செல்லுபடியாகின்ற பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமைதான் உருவாகும்.
ஒரு சட்டத்தை இயற்றினால் அது முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும். 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும் அது இந்த காலத்தின் நடைமுறைகளுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. "இஸ்லாமியச் சட்டங்களை ஏற்கக்கூடாது, ஏனெனில் அவை பழங்காலத்தவை" என்று கூறக்கூடியவர்கள், கூடா உறவுகளைத் தடுக்கக் கூடிய ஒரு மாற்று வழியை எடுத்து காட்ட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் கூற வேண்டும்.

இஸ்லாத்தில் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதற்கு இன்னும் வேறு பல காரணங்கள் இருந்தாலும் - தங்களின் மானத்தை மட்டுமல்லாது - முக்கியமாகப் பெண்களின் மானத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்க்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ கட்டளையிடவில்லை. மாறாக ஒரு ஆண் தான் விபச்சாரத்திற்கு சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறு அந்த மானகேடான காரியத்தை செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது அவ்வளவு தான்.

முற்றும்.