நான் சொல்லவில்லை...

மானிட சமத்துவம் என்ற புத்தகத்தில் T.P. கணபதி அவர்கள் எழுதியதிலிருந்து...

அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஹரிஜனங்களுக்கு சம உரிமை
அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஹரிஜனங்களுக்கு சமஉரிமை என்பது வெறும் ஏட்டளவில் தான்! அப்படிச் சமஉரிமை நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் மகாத்மா காந்திக்கு இணையான இந்த நாட்டில் அரசியல் சாசனம் இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ஹிந்து மதத்தைவிட்டு விலகி புத்த மதத்திற்கு மதம் மாறவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

திரு.ஜெகஜீவன்ராம் அவர்களும் மகாத்மா காந்திக்கு இணையான ஒரு பெரிய தலைவர். இவரும் ஒரு ஹரிஜன். முன்னாள் உ.பி. முதல்வராக இருந்த காலஞ்சென்ற சம்பூர்ணாந்தின் உருவச் சிலையை (மனிதனின் சிலையை) ஹரிஜன தலைவர் ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். அதனால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாம்! காசியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அந்தச் சிலை கழுவி சுத்தி செய்யப்பட்டது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீனாட்சிபுரத்தில் 560 ஹரிஜனங்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது பற்றி தமிழ்நாடு ஷெடியூல் ஜாதிகள் இயக்குனர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்: பொதுவாக ஹிந்து சமூகத்தில் அனுஷ்டிக்கப்படும் தீண்டாமை, அலட்சியம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ஹரிஜனங்கள் நெடுங்காலமாகப் பாரபட்சமாக நடத்தப்படுவதே அவர்களுடைய மத மாற்றத்துக்குக் காரணம் என்பது தெளிவு. அவர்கள் தாங்களாகவே மதம் மாறினரே தவிர எத்தகைய நிர்ப்பநதமோ, ஆசை வார்த்தையோ, தூண்டுதலோ அதற்குக் காரணம் அல்ல என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

பெயர் மாற்றத்தால் ஜாதிக் கொடுமை ஒழிகிறது

ஜாதிக் கலவரங்களைத் தவிர்க்க கலகங்களால் மாற்ற முடியாத, பல சட்டங்கள் போட்டும் அதன் மூலம் மாற்ற முடியாத, தாழ்த்தப்பட்டவன் என்ற கடுஞ்சொல்லை ஒரே ஒரு பெயர் மாற்றத்தால் மாற்ற முடியும்: அத்தோடு ஜாதிக் கொடுமையும் ஒழிகிறது என்பதை ஹரிஜன மக்கள் உணர வேண்டும்.

ஒரு கிராமத்துக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்திருந்தால், அவர் என்ன ஜாதி என்று தெரிந்துக்கொள்ள எல்லா ஜாதியினரும் ஆர்வம் காட்டுகின்றனர்! அவர் பெயர் பரமசிவம் என்று சொன்னால் அது ஹிந்துப் பெயர். ஆதலால் அவர் என்ன ஜாதி என்று தெரிந்துகொள்ளும் வரை விடுவதில்லை!

அந்த அதிகாரியின் பெயர் அந்தோணி என்று சொன்னால், அது கிறிஸ்துவப் பெயர் கிறிஸ்துவராக இருந்தாலும் என்ன ஜாதி கிறிஸ்துவர் என்று தெரிந்து கொள்ளும் வரை விடமாட்டார்கள்!

அந்த அதிகாரியின் பெயர் அப்துல் காதர் என்று சொன்னால் எல்லோரும் புது அதிகாரியாக பாய் வந்திருக்கிறார் என்று பேச்சை முடித்துவிடுகிறார்கள். இதில்மேற்கொண்டு அவர் என்ன ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை! கருப்பையா ஹரிஜன் தாழ்த்தப்பட்டவன். அதே கருப்பையா இஸ்லாத்தைத் தழுவி அப்துல் காதர் என்று பெயரைச் சூட்டிக் கொண்டால் அவன் ஹரிஜன் என்பதிலிருந்தும், தாழ்ந்தவன் என்ற கடுஞ்சொல்லில் இருந்தும் விலக்கப்பட்டு உயர் அந்தஸ்த்தைத் தானாக அடைந்துவிடுகிறான் என்பதை ஹரிஜன மக்கள் உணர வேண்டும்.

ஆலய வழிபாடு

ஹிந்து மதப் பெரிய ஆலயங்களில் நாம் பார்க்கிறோம்: பணக்காரர்கள், மந்திரிகள், பெரிய அதிகாரிகள் ஆகியோர் மூலஸ்தானத்துக்கு முன்புவரை அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு ஆலய மரியாதைகள் செய்யப்படுகின்றன. ஆனால் ஏழை ஆண், பெண் இரு பாலரும் வரிசையில் நின்று இடித்துத் தள்ளிக் கொண்டு நெரிசலில்தான் சாமி கும்பிட முடிகிறது. ஹிந்து ஆலய வழிபாட்டில் ஏழை, பணக்காரன், அதிகாரிகள், மந்திரிகள் என்ற பாகுபாடு உண்டு. ஹிந்து மதத்தில் ஜாதி வாரியாகத் தனித்தனி ஆலயங்களும் இருக்கின்றன.

கிறிஸ்துவ மதத்திலும் பல ஜாதிகள் இருக்கின்றன். உயர்ந்த ஜாதி கிற்ஸ்துவர், தாழ்த்தப்பட்ட ஜாதி கிறிஸ்தவர் என்று இருப்பதால் அங்கும் ஜாதி வாரியாகத் தனித்தனி ஆலயங்கள் இருக்கின்றன. இங்கும் பாகுபாடு காட்டப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கத்தில் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை பற்றி பார்ப்போம்: முதலில் வரிசை வரிசையாக மேற்கே பார்த்து நிற்க வேண்டும். இன்று இஸ்லாத்தை தழுவியவனாக இருந்தாலும் சரி, ஏழையானாலும் சரி அவர்கள் முன் வரிசையில் நின்றுவிட்டால், அவர்களைப் பின் வரிசைக்குப் போ என்று சொல்லக் கூடாது. மந்திரியானாலும், பணக்காரனானாலும், அதிகாரிகளானாலும் தொழுகைக்கு வந்தால் முன் வரிசையில் இடம் இல்லாவிட்டால் பின் வரிசையில்தான் நிற்கவேண்டும். இவர்களுக்காக வழிவிடச் செய்து முன் வரிசைக்குக் கொண்டு போகக் கூடாது. ஒன்றே குலம்: ஒருவனே தேவன்! என்ற சொல் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுக்குத்தான் பொருந்தும். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதும், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாததும் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றில் தான்! இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. மானிட சமத்துவம் இஸ்லாத்தில் தான் கொடுக்கப்படுகிறது.