பலதார மணம் - 1

நான் கீழே குறிப்பிட்டிருக்கின்ற செய்திகளில் பல இந்த வளைதலத்திலிருந்து தொகுத்தவை. இன்னும் சில செய்திகள் எனது சிற்றறிவுக்கு சரியெனப் பட்டு எழுதியவை. நான் எழுதியவற்றில் ஏதேனும் தவறிருப்பின் அவை என்னையே சாரும்.

பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும் . இருபாலருக்கும் பொதுவான பலதார மணத்தை பாலிகேமி (POLYGAMY) என்பார்கள். இந்த பாலிகேமி என்பது பால் வேற்றுமைகளின் அடிப்படையில் இருவகைப் படும்.

1. முதலாவது வகை - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை பாலிஜினி (POLYGYNY) என்பார்கள்.

2. இரண்டாவது வகை - ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள்.

இக்கட்டுரையின் கருவான
முதலாவது வகை, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகப்படியாக நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது குவாட்ரோஜினி (QUADROGYNY) இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பல ஆண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் தடை செய்வது ஏன்?

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதிக்கும் இஸ்லாம், பெண்களுக்குத் தடை செய்வது ஏன்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அக்கேள்விக்கு விடை காணும் முயற்சியில் எனது சிந்தனையோட்டமே இக்கட்டுரை. இந்த தலைப்பு தொடர்பாக முதலாவது, இரண்டாவது என இரண்டு பதிவுகள் சுட்டுவிரல் அவர்கள் பதிந்துள்ளதையும் உங்களின் நினைவுக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
 
இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கமாகும். ஆணையும் பெண்ணையும் சமமாகவே படைத்த இறைவன், ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் இயல்புகளையும் கொடுத்துள்ளான். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும் பொறுப்புகளும் உள்ளன. ஆண்களும் பெண்களும் சமமானவர்களே (Equal) தவிர - அனைத்து விசயங்களிலும் ஒரே மாதிரியான தன்மையுடையவர்கள் (Identical) அல்லர்.

ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருந்தால் - ஒவ்வொரு மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகள் ஒரே தந்தைக்குத்தான் பிறந்தது என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயத்தில், ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எவ்விதச் சோதனையுமின்றி எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை - இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதானதாக இல்லை. வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் டி.என்.ஏ பரிசோதனை செய்வதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம்.
ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம் .

ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளைச் செய்வது உடலியல் ரீதியாக ஆணுக்கு மிக எளிதாகும். பல ஆண்களைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணால் - மனைவி என்ற முறையில் - தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஒரு பெண், மாதவிலக்காகும் கால கட்டங்களில் மனோ ரீதியாகவும் நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் ஏராளமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பல கணவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்சனை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணுக்கு ஏற்படுவதில்லை.

ஓர் ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஒரே தந்தையான அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?

உதாரணத்திற்கு, ஓர் ஆண் பத்து பெண்களுடன் ஓர் ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்தப் பத்து பெண்களும் பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வாய்ப்பிருக்கின்றது. அதே சமயத்தில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் பத்து குழந்தைகளைப் பெற முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. (இதனை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்பது வேறு விசயம்.)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. இது போன்று இதுவரை அறியப் படாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். இது போன்ற காரணங்களினால்தான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவனை மணவிலக்கு செய்த பின்னர் குறிப்பிட்ட தவணைக்குப் பிறகு வேறொரு ஆணை மணமுடிக்கவும் இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை; மேலும், கணவனில்லாத பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

1 பின்னூட்டங்கள்:

said...

//மேற்படி பிரச்சனை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணுக்கு ஏற்படுவதில்லை.//

Really?!