கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார் - 2

எனது இந்த பதிவை ஆரம்பிப்பதற்கு முன்னால் முஸ்லிம் நன்பர்களுக்கு அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்பர் மயிலாடுதுறை சிவா May 16, 2005 அன்று எழுதிய "இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா?" என்கிற பதிவு மற்றும் பிற பல பதிவுகளின் பின்னூட்டங்களில் தேவையில்லாமல் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து எழுதியிருந்ததை படித்தேன். ஒரு விசயத்தைப் பற்றி ஆழ்ந்த, தீர்க்கமான அறிவு இல்லாமல் எதையோ நாம் எழுதப் போய் அதில் நாம் சில தவறுகளை செய்து விட்டால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி, மெருகேற்றி இஸ்லாம்தான் அதற்கு காரணம் என்று மக்களை முட்டாளாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது அனைவரும் அறிந்த உண்மையே. எழுதிய அனைவரையும் நான் குறை கூறவில்லை. ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் செய்ததாக மக்களிடையே பரப்பப்படுவதால் நீங்கள் எதை எழுதுகின்றீர்களோ அதனை தீர ஆலோசித்து அல்லது மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனைப் பெற்றபின் வேகத்தை விடுத்து விவேகத்தையும், நிதானத்தையும் கடைபிடித்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முஸ்லாமல்லாத மாற்று மத நன்பர்ளே நடுநிலையுடன் சிந்திக்க வேண்டுகிறேன் !
எந்த மதகோட்பாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது மத கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும் ஒட்டு மொத்த மனித இனம் முழுவதும் ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு உண்மை என்னவென்றால் என்றாவது ஒரு நாள் மனிதன் தன்னுடைய மரணத்தை அடைந்தே தீருவான் என்பதுதான்.
மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதில்தான் அனைவரும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம்.
அதில் ஒன்று ...
மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை என்பதெல்லாம் கிடையாது. இதெல்லாம் பூச்சாண்டி வித்தைகள் தான். மக்களை பயமுறுத்தி தங்களது சுய லாபத்தை அடைவதற்காக செய்த வீண் வேளைகள் தான் .... என்பது போன்று ஒரு சாராரின் வாதம்.
மற்றொன்று ...
மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. இவ்வுலகம் தான் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்காண பரிச்சைக் களம். அதில் நன்மை மற்றும் தீமைகளைப் பற்றி இறைவனின் கோட்பாடுகள் மற்றும் இறைதூதரின் போதனைகளைக் கொண்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளோம். யார் இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு நன்மையை செய்து தீமையை விட்டு தன்னை தடுத்தும் வருகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் என்றும், மாறு செய்பவர்களுக்கு நரகம் ... என்பது போன்று மறுசாராரின் வாதம் அமைந்துள்ளது.
ஒரு வாதத்திற்காக மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்கை இல்லை என்று சொல்வது சரியென்று வைத்துக்கொள்வோமேயானால் அதனால் நஷ்டப்படுவது இரு சாராரும் இல்லை.
அதே சமயத்தில் ...
மறுசாராரின் வாதம் (அதாவது மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. இவ்வுலகம் தான் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்காண பரிச்சைக் களம்... போன்றவற்றை) சரியென்று வைத்துக்கொண்டால் அதில் நஷ்டப்படுவது நான் மேலே கூறிய முதல் சாரார் தான் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டு நடுநிலைமையுடன் சிந்தித்து செயல்படுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் முஸ்லிம்கள், இஸ்லாம்தான் முழுமனித குலத்திற்கும் நேர்வழிகாட்டி அதுவல்லாத அனைத்தும் வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்கின்றது என்கின்றனர். இஸ்லாத்திற்கு எதிராக எழுதுபவர்கள் மற்றும் அதன் அடிப்படைவாதத்தை குறை கூறுபவர்கள் அனைவரும் இஸ்லாமும் வழிகேட்டின் பக்கமே மக்கள் அனைவரையும் வழிநடத்துகிறது என்கின்றனர். வழிகேடு என்றொன்றிருந்தால் நேர்வழியும் இருக்கத்தானே வேண்டும். எனவே இஸ்லாம் மக்களை வழிகெடுக்கிறதென்றால் மக்களை திசை திருப்ப முயலாமல் உங்களுடைய நேர்வழியையும் ஆதாரத்தின் மூலமாக எடுத்து வையுங்களேன் பார்ப்போம்.
அடுத்தது நேசகுமார் 18.5.05 அன்று எழுதிய பதிவில் கீழ்கண்டவாறு கேள்வி கேட்டிருந்தார்//...ஸஹீயான ஹதீதுகள் இவைதான் என்று முஸ்லிம் சமுதாயம் முழுவதும் ஒப்புக் கொள்ளும் ஒரு பட்டியல் இருக்கிறதா?
எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு ஒத்த கருத்து இஸ்லாமியர்களிடையே இல்லை. ஒரு சாரார் சொல்வதை மறுசாரார் மறுப்பதும், ஒருவர் அளிக்கும் விளக்கத்தை மற்றவர்கள் மறுப்பதும் ...//
உண்மைதான் நேசகுமார் அவர்களே! முஸ்லிம் சமுதாயம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு பட்டியல் இல்லைதான். மேலும் அப்படி இருக்கவும் வாய்ப்பில்லைதான் ஏனென்று சொன்னால் நம்முடைய (அகில உலகத்திற்கும்) இறை தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அப்படித்தான் முன்னறிப்பு செய்தார்கள் அது என்னவென்றால் "... என்னுடைய சமுதாயத்தினர் 73 பிரிவினராக விரைவில் பிரிந்து போவார்கள், அதில் ஒரு பிரிவினரைத்தவிர மற்ற அனைவரும் நரகிற்கே செல்வார்கள் ..." (நூல்: அபூ தாவூத், திர்மிதி) என்கிற ஹதீதை உண்மைபடுத்துவதாகத்தான் நீங்கள் எழுதிய கூற்று இருக்கிறது. மேலும் ஒவ்வொரு பிரிவினரும் தன்னை வழிகேட்டில் இருப்பதாக நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மாறாக நாங்கள் தான் நேர்வழியில் இருக்கின்றோம் என்று தான் கூறுவார்கள். அதில் பெரும்பாலோர் குர்ஆன் மற்றும் ஹதீதுகளையே ஆதாரமாக எடுத்து வைப்பர். யார் நேர்வழியைத் தேடி அதனைப் பெற முயற்சி செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அந்த நேர்வழியை இலகுவாக்கி வைப்பான். ஆனால் யார் வழிகேட்டை தேடி அதற்காக முயற்சி செய்கிறார்களோ அவர்களும் குர்ஆனையும் ஹதீதுகளையும் ஆதாரமாகக் காட்டியே மக்களை வழிகெடுப்பார்கள். கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில் அதுபற்றி இறைவன் கூறுகின்றான்.
(இறைவனாகிய) அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கிவைத்தான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. மற்றவை (பல அர்த்தங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் வசனங்கள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு (என்னும் நோய்) இருக்கின்றதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக (பல அர்த்தங்களைக் கொண்ட) முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைகள்தான், நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:7)மேலும் உங்களது எழுத்தாற்றல் சிறந்ததா அல்லது என்னுடைய எழுத்தாற்றல் சிறந்ததா மேலும் வெற்றி பெற்றவன் நீங்களா அல்லது நானா என்பதும் அல்ல எனது வாதம்.
உதாரணத்திற்கு ஒருவர் இஸ்லாத்தைப்பற்றி சொல்வது தவறாக இருந்து அதில் அவர் தோற்றுவிட்டார் என்று வைத்துக்கொண்டால் அவரிடம் எழுத்தறிவில் குறைவு அல்லது இஸ்லாம் பற்றிய முழுமையான ஞானம் இல்லை என்றுதான் அதற்கு அர்த்தமே தவிர இஸ்லாத்தில் குறை என்று அதற்கு அர்த்தமாகாது. ஏனென்று சொன்னால் இணைய தளத்தில் பங்கேற்கும் அனைவரும் இஸ்லாமிய அறிவு முழுமையாக அறிந்தவர்களில்லை. அதில் ஒரு சிலர் தானாகவே வலைப்பதிவின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் ஒப்புக்கொண்டதையும் நீங்கள் படித்திருக்கக் கூடும்.
மேற்கூறப்பட்ட விசயங்கள் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.
இஸ்லாத்தை குறை கூறி எழுதுகின்றவர்களில் பெரும்பாலோர்களின் பதிவுகளில், அதிகமாக அறிஞர்களின் கருத்தையே மேற்கோள் காட்டுகின்றார்கள். எனது அறிவுக்கு எட்டிய வரையில் எந்த ஒரு முஸ்லிமும் எந்த அறிஞர்களையும் முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டி என்று கூறியதில்லை. அப்படி யாரேனும் எழுதி இருந்தாலும் அதுவும் தவறு தான். முஸ்லிம்களுக்கு வழிகாட்டியெல்லாம் குர்ஆனும் நபி மொழிகளும் தான்.
நேசகுமாருடைய மேலேயுள்ள கேள்விக்கு தற்காலிக பதில் என்னவென்றால் இறைவன் இருக்கின்றான் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் பிறகு ஹதீதுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு கோர்வை செய்யப்பட்டது? எந்த நிபந்தனைக்கு உட்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எந்த நிபந்தனைக்கு மாற்றமாக இருந்தால் அதனை புறக்கணிக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை நான் (இறைவன் நாடினால்) பின்பொரு பதிவில் எடுத்து வைக்க இருக்கிறேன்.

4 பின்னூட்டங்கள்:

said...

நன்றி புதியவன் அவர்களே!
நமது கடமையெல்லாம் எத்தி வைப்பதுதான். நேர்வழி கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் நம்முடைய கையில் இல்லையே. இறைவன் நாடினால் நிச்சயமாக நேர்வழி பெறுவார்கள். உதாரணத்திற்கு உமர் இப்னுல் ஹத்தாப் (ரலி) அவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் இஸ்லாத்தின் தீவிர எதிரியாகத்தான் இருந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டப்படி பிறகு அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்கள் அல்லவா? எனவே பொருத்திருந்து பார்ப்போம்.

said...

நன்றி சுடர் அவர்களே!
எவர்களுடைய உள்ளத்தையும் அலசி ஆறாயும் சக்தி நமக்கில்லை.
நம்முடைய கடமையை நாம் செய்து விட்டு போக வேண்டியது தான்.

said...

இந்த ஒரு பதிவிலேயே முஸ்லிம்களுக்கும் எதிர்மறை விமர்சகர்களுக்கும் வேடிக்கைப் பார்க்கவந்து ஈர்க்கப்படுகிற நடுநிலையாளர்களுக்குமாக பயனுள்ள விஷயம் கூறியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

said...

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே
பாபு, ஜாபர் (ஸபாமர்வா) அவர்களுக்கு நன்றி
மேலும் தங்களின் மேலான யோசனைகளை irainesan@gmail.com மூலம் மடல்களை எதிர்பார்க்கிறேன்.